
கோலாலம்பூர், மார்ச் 23 – பினாங்கு, Sungai Bakap ஆரம்ப தமிழ்ப் பள்ளிக் கூடத்தின் புதிய கட்டடத்தைக் கட்டுவதை நிறுத்த, அம்மாநில கல்வி அமைச்சு எடுத்திருக்கும் முடிவில் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பதாக, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்தார்.
தற்போது தனியார் நிலத்தில் இருக்கும், Sungai Bakap பள்ளிக்கூடத்திற்கு புதிய நிலமும், கூட்டரசு அரசாங்கத்தின் 35 லட்சம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கூடத்தின் புதிய கட்டடத்தைக் கட்ட 1 கோடியே 50 லட்சம் ரிங்கிட் வரை செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளது.
அதையடுத்து, போதிய நிதி இல்லாத காரணத்தால், புதிய பள்ளிக்கூடத்தின் கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எனினும், போதிய நிதி திரட்டும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதிய கட்டடத்தை கட்டும் பணிகள் நிறுத்தப்பட வேண்டுமென, மாநில கல்வி துறை, சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட தலைமையாசிரியருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
அதோடு, மாணவர்களை அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கவும் அக்கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.
கல்வி துறையின் அந்த முடிவு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், புதிய கட்டடத்தை கட்டுவதற்கான முயற்சியை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என பி. ராமசாமி குறிப்பிட்டார்.