
கோலாலம்பூர் – ஜூலை 15 – அண்மையில் கனமழை காரணமாக வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் ரத்து செய்யப்பட்டதால், மலேசியாவிற்கு வருகை புரிந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர், கோலாலம்பூர் நகரத்தின் சுத்தத்தையும் சாலைகளின் நேர்த்தியையும் கண்டு வியந்து, சமூக ஊடகத்தில் மலேசியாவை பாராட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புகளின்றி நமது நாட்டிற்கு வருகை புரிந்த அவர், கோலாலம்பூரில் தரையிறங்கியவுடன் தனக்கு மெய் சிலிர்த்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
குழிகள் இல்லாத சாலைகள், அரசியல்வாதிகளின் புகைப்படங்களைக் கொண்டிராத பதாகைகள், எல்லா இடங்களிலும் தூய்மை, சிறந்த வாழ்க்கைத் தரம், சுத்தமான காற்று மற்றும் உதவும் மக்கள் என்று அவர் பாராட்டி எழுதியிருப்பது உள்ளூர் மக்களின் பார்வையை ஈர்த்துள்ளது.
தங்களது நாட்டில் எல்லா வளங்களும் இருந்தாலும், சிறப்பாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அடிப்படை வசதிகளுக்காக இன்றும் நாங்கள் போராடுகிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தென்கிழக்காசிய நாடுகள் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்றும் குறிப்பாக இந்தியர்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்றும் நேர்மறை கருத்து குவியல்கள் வந்த வண்ணமாக உள்ளன.