
தும்பாட், பிப் 28 – நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தரக் கட்டுப்பாட்டைப் பூர்த்திச் செய்யாததால், கிளந்தான், தும்பாட்டில் 5 உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, மாநில சுகாதார இயக்குநர் டத்தோ Dr சை’னி ஹுசின் (Datuk Dr Zaini Hussin ) தெரிவித்தார்.
கிளந்தான் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவும் கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும் இணைந்து தும்பாட் மாவட்டத்தில் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மொத்தம் 61 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் சுத்தமில்லாத அந்த 5 உணவகங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக டத்தோ சை’னி சொன்னார்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான தாய்லாந்து எல்லைக்குச் செல்லும் பிரதான சாலை, மற்றும் தும்பாட்டைச் சுற்றியுள்ள உணவு வளாகங்களுக்கு அச்சோதனை நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.