
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27- செந்தூலில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலின் உறுப்பினர் பதவி, கோலாலம்பூரில் வர்த்தகம் செய்து வரும் அனைத்து நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கும் பொதுவானது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜாலான் அம்பாங்கில் உள்ள ஆறு கிட்டங்கிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் பதவியை மட்டுப்படுத்தும் முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது.
1954ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அசல் அறக்கட்டளைப் பத்திரத்தில், உறுப்பினர் பதவியை குறிப்பிட்ட கிட்டங்கிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தும் விதிமுறை எதுவும் இல்லை என நீதிபதி Gan Techiong தெரிவித்தார். ‘குறிப்பிட்ட சமூகத்தினர்’ என்ற வரையறையில் கோலாலம்பூரில் வர்த்தகம் செய்யும் அனைத்து நாட்டுக்கோட்டை செட்டியார்களும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.
உடையப்பன் முருகப்ப செட்டியார் உள்ளிட்ட எட்டு நாட்டுக்கோட்டை செட்டியார்கள், ‘மகமை’ எனப்படும் சந்தாவைச் செலுத்த முயன்றும் உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழக்குத் தொடர்ந்தனர். இதனிடையே, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி உருவாக்கப்பட்ட கூடுதல் அறக்கட்டளைப் பத்திரம், ஜாலான் அம்பாங்கில் உள்ள கிட்டங்கிகளுக்குள் மட்டுமே அறக்கட்டளையின் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகக் கூறி, அது செல்லாது என நீதிபதி அறிவித்தார்.
மேலும், மனுதாரர்களும் எதிர்கால உறுப்பினர்களும் சேர்வதற்காக ஏழாவது கிட்டங்கி அமைக்கும் பிரதிவாதிகளின் முன்மொழிவையும் நீதிமன்றம் நிராகரித்தது. தற்போதுள்ள ஆறு கிட்டங்கிகளும் கோலாலம்பூரில் வர்த்தகம் செய்யும் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் திறக்க வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட மகமைத் தொகையைச் செலுத்தி மனுதாரர்கள் தாங்கள் விரும்பும் கிட்டங்கியில் உடனடியாக உறுப்பினர்களாக சேர அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
எதிர்கால உறுப்பினர்களின் தகுதி குறித்து சர்ச்சை ஏற்பட்டால், நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கும், கோலாலம்பூரில் வர்த்தகம் செய்வதற்குமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. கோயிலுக்கு பெறுநர் (receiver) ஒருவரை நியமிக்க வேண்டும் அல்லது முன்மொழியப்பட்ட தற்காலிகப் பதிவு மற்றும் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார். இரு தரப்பினரும் தங்களது வழக்குச் செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.



