
கோலாலம்பூர், ஆகஸ்ட்.27- நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கித் தவித்து வரும் மலேசியர்களைத் தேடி மீட்பதற்கு, பிரதமரும் மலேசிய அரசாங்கமும் உடனடி பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்டுள்ள பேரிடரில் 54 மலேசியர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களை அவசரமாகத் தேடி, மீட்டு, பாதுகாப்பாக மலேசியாவுக்கு அழைத்து வர அரசாங்கம் தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நேபாளத்தின் ரசுவாவில் சாலைகள், உள்கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன. எனவே, மலேசிய ஆயுதப்படைகள், NADMA, மருத்துவக் குழுக்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளை உள்ளடக்கிய தேடல் மற்றும் மீட்புக் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், நேபாளம் மற்றும் சீன அதிகாரிகளுடன் இணைந்து எல்லைப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து சம்பவ இடத்தில் அவசரகால கட்டளை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க வேண்டும். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காணாமல் போன மலேசியர்களைத் தேடுவதுடன், மலேசியாவில் 24 மணி நேர குடும்பத் தொடர்பு மையம் அமைத்து குடும்பங்களுக்கு சரிபார்க்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இவ்வேளையில், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள அவ்வெள்ளப் பேரிடரில் உயிரிழப்புகள் பதிவாகி பலர் காணாமல் போயிருப்பது வேதனையளிப்பதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இயற்கைப் பேரிடரின் தாக்கம் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் உள்ள இந்தியாவின் சில பகுதிகளையும் பாதித்துள்ளது. நேபாளம் மற்றும் இந்தியாவில் கடினமான சூழ்நிலையில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வரும் மீட்புப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், மருத்துவக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலான பணி பாராட்டத்தக்கது. இரு நாடுகளுடனும் மலேசியா நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள நிலையில், இத்துயரமான நேரத்தில் நேபாளம் மற்றும் இந்திய மக்களுடன் மலேசியா உறுதியாக நிற்பதாக அவர் தெரிவித்தார்.
அதோடு இந்தியா மற்றும் நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கான உதவிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள உத்தரவை வரவேற்பதாகக் குறிப்பிட்ட குலசேகரன், மலேசியாவின் திறமையான SMART குழுவை அங்கு அனுப்புவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



