
செப்பாங், ஜூலை-29-வரும் அக்டோபரில் செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளமான SIC-யில் நடைபெறவுள்ள Formula 1 கார் பந்தயத்தின் அனைத்து வருவாயையும் பஹ்ரேய்னே பெறவுள்ளது.
மலேசியா உள்ளூர் ஏற்பாட்டுச் செலவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்த பந்தயம் மலேசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான 70 முதல் 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஏற்பாட்டுக் கட்டணத்தை பஹ்ரைனே செலுத்துவதாக, SIC தலைமை நிர்வாக அதிகாரி Azhan Shafriman Hanif உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியாவின் பொறுப்பு, பந்தயச் சுற்றை F1 தரத்திற்கு கொண்டு வர ஆகும் 40 மில்லியன் ரிங்கிட் செலவோடு முடிவடைகிறது என்றார் அவர்.
இதனால், டிக்கெட் விற்பனை, உபசரிப்பு மற்றும் பிற வருவாய்களை பஹ்ரேய்னே முழுமையாகப் பெறுவதுடன், டிக்கெட் விலையையும் தீர்மானிக்கும்.
டிக்கெட் மற்றும் இதர வணிக விவரங்கள் குறித்துப் பேச பஹ்ரேய்ன் குழுவினர் அடுத்த வாரம் மலேசியா வரவுள்ளனர்.
அப்போது மலேசிய இரசிகர்களுக்கு சிறப்பு விலையில் டிக்கெட்டுகளைப் பெற முயற்சிப்பதாக Azhan தெரிவித்துள்ளார்.
இந்த ‘Gulf Air Bahrain Grand Prix’ பந்தயம் அக்டோபர் 2 முதல் 4 வரை செப்பாங்கில் நடைபெறவுள்ளது.
2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு F1 மலேசியாவுக்குத் திரும்புவதால், உள்ளூர் இரசிகர்களிடையே பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.



