
செராஸ், ஜூலை-7 – கோலாலாம்பூர், செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகே 42 மாடி சொகுசு கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு, பள்ளி மேலாளர் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
0.8 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை 2005-ஆம் ஆண்டே பெற்றோர்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியதால், 2016-ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.
எனினும், கடந்தாண்டு டிசம்பர் முதல் அங்குக் கட்டுமானம் மீண்டும் தொடங்கியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பள்ளியின் முன் திரண்டு, பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் என சுமார் 50 பேர் ஒன்றுகூடி அமைதிப் போராட்டம் நடத்தினர்.
பள்ளிக்கு மிக அருகில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்புக்கும் சுகாதாரத்திற்கும் அக்கட்டுமானம் அச்சுறுத்தலாக உள்ளதாக அவர்கள் முறையிட்டனர்.
இந்த 0.8 ஏக்கர் நிலத்தில் செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு திடல் அமைக்கவும், மண்டபம் கட்டவும் கொடுத்து விடுமாறு 2005-ஆம் ஆண்டு முதல் விண்ணப்பித்து வருகிறோம்; ஆனால் இதுவரை அதற்கு பதிலில்லை என பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் வீ.குமார் தெரிவித்தார்.
கட்டுமானத் தளத்திலிருந்து வரும் பெரும் இரைச்சல் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமைகிறது; லாரிகளும் டிரேய்லர்களும் அடிக்கடி வந்துபோவதால் நெரிசல் பிரச்னையோடு விபத்து அபாயமும் உள்ளது.
பிரதமர் துறை, கல்வி அமைச்சு, DBKL, செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர், MACC உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிடம் புகார் செய்தும் பலனில்லை.
42 மாடி கட்டுமானத் திட்டத்தை எதிர்த்து மறியலில் பங்கேற்ற தமிழ்ப்பள்ளிக் காப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட சிலர், வணக்கம் மலேசியாவிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக்கொண்டனர்.
மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டு, மேம்பாட்டாளர்களுக்குச் சாதகமாக DBKL நடந்துக் கொள்ளக் கூடாது.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை இரத்துச் செய்து, அந்நிலத்தை செராஸ் தமிழ்ப்பள்ளியின் பசுமைத் திட்டத்திற்கு கொடுத்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.