
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-11 – TLDM எனப்படும் அரச மலேசியக் கடற்படையின் கேடட் அதிகாரி ஜே. சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த போலீஸ் நிலைப்பாடு என்ன என, அவரின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆறாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அவர் மரணம் ஒரு கொலையென ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தே ஓராண்டாகி விட்டது; இந்நிலையில் போலீசார் விசாரணை அறிக்கை திறந்துள்ளார்களா இல்லையா என்பது இன்னமும் புதிராகவே உள்ளது.
விசாரணைக் கோரி, புக்கிட் அமான் மற்றும் தேசிய சட்டத் துறை அலுவலகத்திற்கு மகஜர் அனுப்பிய போதும், அனைவரும் சொல்லி வைத்தது போல் மௌனம் காப்பதாக, சூசை மாணிக்கத்தின் தந்தை ஜோசப் சின்னப்பன் ஏமாற்றத்துடன் கூறினார்.
இன்று தனது இன்னொரு மகன் சார்ல்ஸ் உள்ளிட்டோருடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு சொன்னார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, தனது மகனின் மரணத்தை வெளிப்படையாகவும் நியாயமாகவும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
பிள்ளையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டுமென அதே செய்தியாளர் கூட்டத்தில் PSM கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் வலியுறுத்தினார்.
2018 மே 19-ஆம் தேதி சூசைமாணிக்கம் மரணமடைந்தது தொடர்பில், கடந்தாண்டு மரண விசாரணை நீதிமன்றம் அளித்திருந்த ஒரு பொதுவான தீர்ப்பை, ஈப்போ உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்துச் செய்தது.
27 வயது சூசைமாணிக்கத்தின் பயிற்சிக்குப் பொறுப்பான கடற்படை அதிகாரிகளே அவரின் மரணத்திற்குக் காரணமென உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியிருந்தது.
எலியின் சிறுநீரிலிருந்து பரவும் லெப்தோஸ்பிரோசிஸ் (leptospirosis) நோய்கிருமியால் பாதிக்கக்கப்பட்ட சூசைமாணிக்கத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன.
TLDM அதிகாரிகளின் அச்செயலால் ஏற்பட்ட நேரடி விளைவே சூசைமாணிக்கத்தின் மரணம் என தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.