
ஜோகூர் பாரு, மே-17-எதிர்வரும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அங்குள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது.
மாநில BN தலைவரும் மந்திரி பெசாருமான டத்தோ Onn Hafiz Ghazi, இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொது மக்களின் விருப்பம் மற்றும் அம்னோ, BN அடிமட்டத் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அம்னோ தலைமையும் இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார்.
அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவது ஜோகூர் மக்களின் நல்வாழ்வு மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஒரு வலுவான, நிலையான அரசாங்கத்தை மீண்டும் அமைப்பதற்கான தங்களின் தயார்நிலையைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அளவில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் இணைந்து செயல்படும் BN, தற்போது மாநிலத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
ஜோகூர் மாநிலச் சட்டமன்றத்தின் நடப்பு 5 ஆண்டுகால தவணை, 2027 ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெறும் நிலையில், 60 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 56 இடங்களில் 40 இடங்களைக் கைப்பற்றி BN அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



