
ஜோகூர் பாரு, அக்டோபர் 9 — ஜோகூர் பாருவிலுள்ள பெர்லிங் சாலையில் (Jalan Persisiran Perling), சாலையைக் கடக்கும்போது கார் மோதியதில் 41 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், பாசிர் கூடாங்கிலிருந்து புக்கிட் இண்டா நோக்கிச் சென்ற மஸ்டா 3 ரக கார், திடீரெனச் சாலையைக் கடந்த ஆடவர் மீது மோதியதாக ஜோகூர் பாரு வட மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பிரிண்தெண்டன் அஸ்ரோல் அனுவார் நோர் (Azrol Anuar Nor) தெரிவித்தார்.
கார் ஓட்டுநரால் ஆடவரைத் தவிர்க்க முடியாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், மோதியதில் தலையிலும் உடலிலும் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹமட் ஹாஃபிஸ் அமினுடினை (Muhammad Hafiz Aminuddin) தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



