
தாவாவ், அக்டோபர் 9 — டெலிகிராம் செயலி மூலம் அறிமுகமான 15 வயது பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவனைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, பிற்பகல் 4 மணியளவில், பண்டார் ஸ்ரீ இண்டா (Bandar Sri Indah), பத்து 10, அப்பாஸ் (Jalan Apas) சாலை பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் அதிகார அமைப்பில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரியும் அந்த ஆடவன், சிறுமியைப் புரோட்டோன் சாகா காரில் அழைத்துச் சென்று, ஒரு பல்பொருள் அங்காடியின் பின்புறத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமி தனது தாயிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றவாளி நேற்று இரவு கைது செய்யப்பட்டான்.
சந்தேக ஆடவனை அக்டோபர் 16ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விசாரணைக்காக அவனது கைப்பேசியும் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



