
வாஷிங்டன், அக்டோபர் 9 -அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சுமார் 8 மாதங்களாகப் பணியாற்றிய 4 விண்வெளி வீரர்கள், தங்களது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் Crew-12 திட்டத்தின் கீழ், SpaceX நிறுவனத்தின் Dragon விண்கலத்தில் பயணித்த அவர்கள், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் கடற்கரைக்கு அருகே பசிஃபிக் பெருங்கடலில் நேற்று பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த Jessica Meir, Jack Hathaway, பிரான்சைச் சேர்ந்த Sophie Adenot மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த Andrey Fedyaev ஆகியோரே அந்த நால்வராவர்.
கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளிக்குச் சென்ற இவர்கள், மொத்தம் 237 நாட்கள் அங்குத் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளையும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர்.
குறிப்பாக, Sophie Adenot, அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று பணியாற்றிய முதல் பிரான்ஸ் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
27 மணி நேரத்திற்கும் மேலான திரும்பும் பயணத்திற்குப் பிறகு பூமியை வந்தடைந்த நால்வருக்கும் ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவர்கள் பூமி திரும்பினாலும், அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தற்போது புதிய குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



