
ஜோகூர் பாரு , ஜூன் 22 – ஜோகூர் பாரு மாவட்டத்தில் கல்வி அமைச்சின் கீழ் உள்ள
69 பள்ளிகளுக்கு 1.35 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ரினி தோட்ட தமிழ்ப் பள்ளிக்கும் கூலாய் பெசார் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கும் தலா 4.3 மில்லியன் என மொத்தம் 8.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
அவ்விரு தமிழ்ப் பள்ளிகளுக்கும் கூடுதல் கட்டடத் தொகுதிகளை கட்டும் திட்டங்களுக்கான ஒப்புதல் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டபோது கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் இதனை தெரிவித்தார்.
இந்தக் கட்டுமானத் திட்டங்கள் மூலம் அவ்விரண்டு பள்ளிகளின் கற்பித்தல் மற்றும் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகுப்பறைகள், பல்நோக்கு இடங்கள், கழிவறைகள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளடங்கிய புதிய உள்கட்டமைப்புகள் நிர்மாணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த பள்ளி சமூகத்தின் தேவைகளின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியும் உரிய கவனத்தைப் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், நாட்டின் கல்வி முறையை முழுமையாக மேம்படுத்த மடானி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஆசிரியர்களின் நலன் மற்றும் நல்வாழ்வில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அறைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக அரசாங்கம் இந்த ஆண்டு 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது என்று தகவலையும் அவர் வெளியிட்டார்.



