
கோலாலம்பூர், டிசம்பர்-4,
மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் அதனை உறுதிப்படுத்தினார்.
விசாரணையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள ஏதுவாக ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நவம்பர் 24-ஙாம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் போலீஸார் சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகக் கூறி, அம்மூவரின் குடும்பத்தார் புகார் அளித்திருப்பதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குமார் விளக்கினார்.
அவர்களின் போலீஸ் புகாரை தாம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், நீதி நிலைநாட்டப்பட, வெளிப்படையான விசாரணை நடைபெறும் என்றும் அவர் உத்தரவாமளித்தார்.
முன்னதாக, செம்பனைத் தோட்டமொன்றில் அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தின் போது தங்களைக் கைதுச் செய்ய முயன்ற ஒரு போலீஸ்காரரை வெட்டி காயப்படுத்தியதை அடுத்து மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை முயற்சி என வகைப்படுத்தி மலாக்கா குற்றப்புலனாய்வுத் துறை அதனை விசாரித்து வந்தது.
எனினும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குடும்பத்தார் புக்கிட் அமானே அவ்விசாரணையைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.



