
புத்ராஜெயா, டிசம்பர் 17-மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் நல்ல திருப்பமாக, தேசிய சட்டத்துறை அலுவலகமான AGC, 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ‘கொலைச்’ சம்பவமாக மாற்ற உத்தரவிட்டுள்ளது.
இது போலீஸ் பரிந்துரைகள் மற்றும் விளக்கங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு என அறிக்கையொன்றில் அது கூறிற்று.
நவம்பர் 24 ஆம் தேதி, எம். புஷ்பநாதன், டி. புவனேஸ்வரன், ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆரம்பத்தில், அவர்கள் கொள்ளையர்கள் என்றும், போலீஸாரை பாராங் கத்தியால் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களோ, அம்மூவரும் திட்டமிட்டே கொல்லப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஆடியோ குரல் பதிவு இருப்பதாகக் கூறி முறையிட்டன.
இப்போது, அச்சம்பவம் ‘கொலை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதை குடும்பங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.
இது நீதியை நோக்கிய முக்கியமான படியயென அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.
“தொடக்கத்திலிருந்தே இது திட்டமிட்ட கொலை என ஆதாரங்களுடன் கூறி வருகிறோம். இப்போது சட்டத் துறையும் அதை ஊர்ஜிதம் செய்துள்ளது. போன உயிர் வராது, ஆனால் குறைந்தபட்சம் அக்குடும்பங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளதாக” வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், AGC உத்தரவுக்கு ஏற்ப விரைவிலேயே கொலை விசாரணைத் தொடங்கும் என நம்புவதாகவும், கூட்டு அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர்.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும், முழு அறிக்கை உள்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.



