
புது டெல்லி, நவம்பர்-14, நவம்பர் 10-ஆம் தேதி புது டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையமருகே 13 பேர் உயிரிழக்கவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான கார் குண்டுவெடிப்பில், படித்தவர்களுக்கு முக்கியத் தொடர்பிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் உள்ள Al-Falah பல்கலைக்கழக மருத்துவப் பிரிவைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் ஒருவர் முக்கிய சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலுமிரு மருத்துவர்களுக்கும், காஷ்மீர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பல்கலைக்கழக வளாகம் போலீஸாரின் விசாரணையில் முக்கிய இடமாக திகழ்கிறது.
எனினும், இச்செய்தி பரவியக் கையோடு, அம்மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ பணிகளைத் தவிர, அவர்களுடன் வேறெந்த தொடர்பும் தங்களுக்கு இல்லையெனக் கூறி அந்த பல்கலைக்கழகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகங்களில் இராசயணமோ அல்லது வெடிப்பொருட்களோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அது உறுதிப்படுத்தியது.
வழக்கமாக படிக்காதவர்களே பெரும்பாலும் தீவிரவாத சிந்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு போராளிகளாக மாறுவர்.
ஆனால், இந்த டெல்லி குண்டுவெடிப்பில் மருத்துவர்கள் போன்ற நன்கு படித்தவர்களின் ஈடுபாடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படிப்பாளிகளாகவும் உழைப்பாளிகளாகவும் குடும்பத்தாரால் கொண்டாடப்படும் மருத்துவர்கள் எப்படி பயங்கரவாதக் கட்டமைப்புக்குள் ஈர்க்கப்படுகின்றனர் என்ற சூடான விவாதத்தை இது கிளப்பியுள்ளது.
சமூகத்தில் ஒருவராக ‘படிப்பாளிகள் போர்வையில் திரியும் திவிரவாதிகளின்’ இப்புதிய அணுகுமுறை உள்ளபடியே மக்களிடத்தில் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்த மருத்துவர்கள் உட்பட இதுவரை சுமார் 6 சந்தேக நபர்கள் விசாரணைக்காகக் காவலில் உள்ளனர்.
ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 2,900 கிலோக்கும் அதிகமான வெடிகுண்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



