தண்ணீர்மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-8, பினாங்கு தண்ணீர்மலை, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று ஐயப்ப சுவாமிக்கு இருமுடி காணிக்கை செலுத்தவும், முருகனின் திருவருளைப் பெறவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.
இதனால் மலைக்கோயிலே விழாக்கோலம் பூண்டது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் அதில் பங்கேற்று, பக்தர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதை உறுதிச் செய்தது.
அவ்வகையில், அனைத்து பக்தர்களுக்கும் இலவச உணவுகளையும், ஐஸ் மோர் பானங்களையும் அவ்வாரியம் வழங்கியது.
அந்நல்லெண்ண முயற்சியில் அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயரும், துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரனும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதர தன்னார்வலர்களுடன் இணைந்து இருவரும் இலவச உணவுகளையும் பானங்களையும் பக்தர்களுக்கு எடுத்து வழங்கினர்.
மக்களோடு மக்களாக அவ்விரு தலைவர்களும் பங்கேற்றது, சமூக நலன் பால் அவர்கள் கொண்ட அக்கறையை புலப்படுத்தியது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்போடு நடந்தேறிய இந்நிகழ்வு, அனைவரிடமும் அன்பு மற்றும் ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது.