கோலாலம்பூர், டிச 12 – நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகள் அவர்களுக்கு நியாயமான கட்டணம் விதிப்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா, மலேசிய காப்புறுதி நிறுவனங்களின் சங்கம் ஆகியவை இணைந்து பேச்சு நடத்த வேண்டும் என ம.இ.காவின் உதவித் தலைவரான டத்தோ T. முருகையா வலியுறுத்தினார். தனியார் மருத்துவமனைகள் தங்களது சிகிச்சைக்கான கட்டணம் நிச்சயமற்ற தன்மையால் இருப்பதால் காப்புறுதி நிறுவனங்கள் செலுத்தும் சிகிச்சைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறி காப்புறுதிக்கான கட்டணம் 70 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதால் மக்கள் கடுமையான சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டண அதிகரிப்பு தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதால் மருத்துவ காப்புறுதி கார்டுகளை பயன்படுத்தும் நோயாளிகள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். மக்களுக்கு, குறிப்பாக B40 மற்றும் M40 தரப்பினருக்கு குறைந்த கட்டணத்தை விதிக்க வேண்டும். மக்களுக்கு நீதியை கொண்டுவருவதுடன் ,நிலையான சுகாதார தரத்தை உறுதி செய்வதற்கும் ,இந்த நாட்டின் காப்புறுதி முறை மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். ஓய்வு பெற்று விட்ட பின்னரும் மருத்துவ காப்புறுதி கார்டுகளுக்கு ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திவருவது எந்த வகையிலும் நியாயமாக இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை தேவையென இன்று வெளியிட்ட அறிக்கையில் டத்தோ முருகையா கேட்டுக்கொண்டார்.