
பட்டர்வெர்த், பிப்ரவரி 3 – தமிழர்களின் பண்பாட்டு விழாவாக பொங்கல் இருந்தாலும் , உலகம் முழுவதும் சேர்ந்த பல இன மற்றும் பல்வேறு சமயத்தை சேர்ந்தவர்களும் இந்த திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர். மலேசியா உட்பட உலகில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக பினாங்கு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார். அதுவும் மலேசியாவில் பல இடங்களில் நடைபெறும் பொங்கல் திருவிழா தமிழர்களின் பண்பாட்டுச் செழுமைகளை உறுதிப்படுத்துவதாக பட்டர்வெர்த் டத்தோ ஹாஜி அகமகட் படாவி மண்டபத்தில் நடைபெற்ற பினாங்கு மலேசிய திராவிடக் கழகம் மற்றும் தேசிய மலேசிய திராவிடக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த தமிழர் புத்தாண்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது குமரன் கூறினார்.
மலேசிய திராவிடக் கழகம் தலைவர் டத்தோ அண்ணாமலை ஆண்டுதோறும் தனது குழுவினருடன் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து வந்தார். அவரின் மறைவு மற்றும் அதன் தாக்கத்தை நாம் உணருகிறோம். எனினும் அவரின் கனவை வழிமொழிந்து, பொங்கல் திருவிழாவை சிறப்பாக நடத்தி வரும் குழுவினருக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தொழிலதிபர் டத்தோ மரியதாஸ் கோபால் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மலேசிய திராவிடக் கழகதின் பொதுச் செயலாளர் மணி வாசகம், கெடா மாநில முன்னாள் தலைவர் பாலன் உட்பட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.