Latestமலேசியா

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான MIFA BEYOND கால்பந்துப் போட்டியில் ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி சாம்பியன் ஆனது

ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-14, மலேசிய இந்தியர் கால்பந்து சங்கமான MIFA ஏற்பாட்டில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான MIFA BEYOND கால்பந்துப் போட்டி டிசம்பர் 7,8-ம் தேதிகளில் பினாங்கில் சிறப்பாக நடந்து முடிந்தது.

ம.இ.காவின் கல்விக் கரமான MIED இணை ஏற்பாட்டில் USM Kopa Arena அரங்கில் நடைபெற்ற அப்போட்டியில், நாடளாவிய நிலையில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 80 குழுக்கள் ஆடவர்-மகளிர் பிரிவுகளில் பங்கெடுத்தன.

மொத்தம் 1,200 மாணவர்கள் பங்கேற்றதன் மூலம், நாட்டின் மிகப் பெரிய B12 போட்டியாக இது திகழ்கிறது.

ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தாம் இளைஞர் – விளையாட்டுத் துறை துணை அமைச்சராக இருந்த காலத்திலேயே, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்தாட்ட வளர்ச்சியில் MIFA காட்டிய அக்கறையை நன்கறிவதாக அவர் தமதுரையில் கூறினார்.

MIED மூலமாக ம.இ.கா ஏற்பாட்டு ஆதரவை  வழங்கியமைக்காக அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ SA. விக்னேஸ்வரனுக்கு, MIFA தலைவர் KV அன்பானந்தன் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வேளையில், போட்டியில் வாகை சூடிய ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும், பங்கெடுத்த மற்ற எல்லா பள்ளிகளுக்கும் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இலைமறைக் காயாக உள்ள நமது மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர இது போன்ற நிகழ்வுகள் துணைபுரியும்.

அதோடு பயனற்ற வழிகளில் நேரத்தை கழிப்பதை விடுத்து, விளையாட்டில் சிறந்து விளங்க மாணவர்களை ஊக்குவிக்கும்.

இது போன்ற நன்முற்சியில் MIFA-வுடன் இணைந்து செயலாற்றியதில் ம.இ.காவுக்கும் MIED-க்கும் மகிழ்ச்சியே என்றார் அவர்.

போட்டி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும்
MIED-MIC கல்விக் குழுவின் தலைவரான அண்ட்ரூ டேவிட் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!