
கோலாலாம்பூர், ஜனவரி-14-நாட்டில் தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை சரிவடைந்து வருவது குறித்து, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கடும் கவலை தெரிவித்துள்ளார்.
2026 புதியக் கல்வியாண்டில், நாடு முழுவதும் உள்ள தமிழ் பள்ளிகளில் முதல் வகுப்பில் பதிந்துள்ள மாணவர்கள் 10,330 பேர் மட்டுமே.
இது கடந்தாண்டை விட 691 மாணவர்கள் குறைவாகும்.
“தமிழ்ப் பள்ளிகளே நம் சமூகத்தின் அடையாளமும் முன்னேற்றத்தின் அடித்தளமும் ஆகும்”
எனவே அதனைக் கட்டிக் காத்திட ம.இ.கா உறுதியாக உள்ளது; ஆனால் அதை ம.இ.கா மட்டுமே தனித்து செய்ய முடியாது என்றார் அவர்.
மாறாக, தமிழ் சார்ந்த அரசு சார்பற்ற அமைப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், பள்ளி மேலாண்மை வாரியங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது மலேசியாவில் 528 தமிழ் பள்ளிகள் உள்ளன.
அவற்றில் 155 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனர் என்ற மற்றொரு கவலையையும் அவர் தெரிவித்தார்.
“இது வெறும் எண்கள் பற்றிய விஷயமல்ல; நம் மொழி, கலாச்சாரம், சமூக வலிமையைப் பாதுகாப்பது பற்றியது” என இன்று வெளியிட்ட அறிக்கையில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கூறினார்.



