
கோலாலம்பூர், செப்டம்பர்-15,
அரசியல் தலைவர்களை உட்படுத்தி ஆபாச காணொலி மிரட்டல் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், தானும் மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.
100,000 டாலர் செலுத்தாவிட்டால், AI அதிநவீன தொழில்நுட்ப மூலம் உருவாக்கப்பட்ட அந்த ஆபாச வீடியோக்கள் வைரலாக்கப்படும் என, அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்ற மின்னஞ்சல்கள் முன்னதாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, சுபாங் எம்.பி வோங் சென் (Wong Che), சுங்கை பட்டாணி எம்.பி Taufiq Johari, ஹங் துவா ஜெயா எம்.பி அடாம் அட்லி (Adam Adli) உள்ளிட்டோர் பெற்றிருந்தனர்.
மேலும் சில பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அம்மிரட்டல் கிடைத்திருந்தது.
இந்நிலையில், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களை மிரட்டும் செயல்களை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் ஃபாஹ்மி உறுதியளித்தார்.
இந்தச் சம்பவங்கள் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், மற்றும் குற்றவியல் சட்டமங்களின் கீழ் விசாரிக்கபடும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் மற்றும் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றார் அவர்.