
கோலாலம்பூர், ஜூலை.02 – Kesas நெடுஞ்சாலையில் இரு ஆடவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவ்விரு நபர்களும் அந்நிய நாட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக அவர்கள் ஹெல்மெட் அணியாமல் போட்டார் சைக்கிளில் பயணிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இரு ஆடவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் கணவரின் முன்னாள் ஊழியர் என்பது தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலானாய்வுத் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் Mohamad Zamzuri Mohamad Isa தெரிவித்தார். அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு அதனைக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் உரிமையாளரும் அடையாளம் காணப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். எனினும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் தலைமறைவாகியிருப்பதாக Mohamad Zamzuri கூறினார்.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ புகார் ஏதும் கிடைக்காத போதும், தலைக்கவசம் அணியாதது உட்பட மேலும் சில போக்குவரத்துக் குற்றங்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர். போக்குவரத்துக் குற்றங்களை நேரில் கண்டால் அது குறித்து புகார் கொடுத்து விவரங்களை வழங்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.



