
புத்ராஜெயா, ஆகஸ்ட்-16-1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான AUKU-வை இரத்துச் செய்யும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முடிவுக்கு, DAP நூறு விழுக்காடு ஆதரவளித்துள்ள அதேவேளையில், ஒற்றுமை அரசாங்கத்துடனான உறவை மறுபரிசீலனை செய்வது குறித்து அக்கட்சியின் இன்றைய சிறப்பு தேசிய மாநாட்டில் காரசார விவாதம் எழுந்துள்ளது.
புத்ராஜெயாவில் தொடங்கிய அம்மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக், AUKU இரத்து நடவடிக்கையை வரவேற்றார்; ஆனால், அதே சமயம் உயர் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதிச் செய்யும் வகையில் கல்விச் சீர்திருத்தங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
“பின்னணியைக் காரணம் காட்டி, எந்தவொரு மலேசியருக்கும் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது”_ என, போக்குவரத்து அமைச்சருமான அவர் திட்டவட்டமாகச் சொன்னார்.
சீர்திருத்த விவகாரங்களில் அரசாங்கத்தின் திடமான முடிவுகள் மற்றும் அவற்றின் அமுலாக்கங்களை DAP நிச்சயம் வரவேற்கும்; முன்னேற்றகரமான மலேசியாவுக்கு இது அவசியம் என அந்தோணி லோக் கூறினார்.
இதனிடையே, இன்றைய மாநாட்டில், DAP தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, பேராளர்கள் விவாதித்து வருகின்றனர்.
அவ்வகையில், கூட்டரசுப் பிரதேசப் பிரதிநிதியான சங்கீத் கவுர் டியோ பேசுகையில், ஆளும் கூட்டணியில் DAP-யின் நிலைப்பாடு குறித்துக் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.
குறிப்பாக, DAP மடானி அரசாங்கத்தில் நீடிக்க வேண்டும்; ஆனால் பிரதமர் அன்வாருடனான அரசியல் உறவை கட்சித் தலைமைத்துவம் அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியது கவனம் ஈர்த்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அன்வார் தங்களுக்குள் பிளவை உண்டாக்கி, அம்னோவை வலுப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக அதிருப்தி வெளியிட்ட சங்கீத், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மட்டுமே நம்பியிருக்காமல், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க DAP தனது சொந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
சுமார் 4,000 பேராளர்கள் கூடியுள்ள இந்த அதிமுக்கிய மாநாட்டில் இன்று எடுக்கப்படவிருக்கும் முடிவே DAP-யின் எதிர்காலம் குறிப்பாக அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான நகர்வைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



