
ஹமில்டன், செப்-30-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகிய இஸ்லாமியப் பண்டிகைகளை அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்களாக அங்கீகரித்துள்ளது. ஆளுநர் Gavin Newsom கையெழுத்திட்ட புதிய சட்டத்தின் கீழ், இவ்விரு பெருநாட்களும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியில் இடம் பெற்றுள்ளன.
2017 சட்டமன்ற மசோதா கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டமாக்கப்பட்டது. அதன் கீழ், பொதுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள் ஏற்கெனவே உள்ள உள்ளூர் நடைமுறைகளின்படி அவ்விரு பண்டிகைகளிலும் விடுமுறை வழங்க அனுமதிக்கப்படுகிறது. தகுதியுள்ள அரசு ஊழியர்களும் அவ்விடுமுறைச் சலுகையைப் பெறலாம்.
நோன்புப் பெருநாளையும் ஹஜ் பெருநாளையும் மாநில விடுமுறைகளாக அங்கீகரிப்பது, கலிபோர்னியாவில் உள்ள முஸ்லிம் சமூகங்களுக்கு அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலானவை என புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



