
ஈப்போ, நவம்பர் 16 – பேராக் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஈப்போவிலுள்ள இந்திரா முலியா அரங்கில் (Indera Mulia) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராக் சுல்தான் மற்றும் அவரது துணைவியார், ராஜா ஹிலிர், ராஜா மூடா, பேராக் மந்திரி பெசார் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், சுமார் 500 அரசு ஊழியர்களும் 10,000 பொதுமக்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, சுமார் 80 விழுக்காடு நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன. மீதமுள்ள 20 விழுக்காடு நிகழ்ச்சிகள் மலாய் மற்றும் சீனக் கலை நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. எதிர்காலத்திலும் தமிழ் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இக்கொண்டாட்டம் தொடர்ந்து நடத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளிலும் சுமார் 65 விழுக்காடு தமிழ் பாரம்பரிய உணவுகளாக இடம்பெற்றன. அவற்றில் சில உணவுகள் செல்லப்பா உணவகத்தின் மூலம் தயாரிக்கப்பட்டன.
இதற்கிடையே, நிகழ்வில் உரையாற்றிய பேராக் மந்திரி பெசார், மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியச் சமூகத்தினரின் பங்களிப்பைச் சிறப்பித்துப் பேசினார். குறிப்பாக, தோட்டங்களை உருவாக்குதல் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் இந்தியர்களின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் அவர்களின் நலன் மற்றும் தேவைகளைக் கவனிப்பதற்கெனத் தனியான பொறுப்புத் தொகுப்பு (Portfolio) உருவாக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.



