Latestமலேசியா

குழந்தைப் புற்றுநோயாளிகளின் உயிரைக் காக்க இரத்த தானம், ஸ்டெம் செல் பதிவு அவசியம் – CCAM

கோலாலம்பூர், நவ.16- –குழந்தைப் பருவப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறார்களின் உயிரைக் காப்பதில் தொடர்ச்சியான இரத்த தானமும், மலேசிய ஸ்டெம் செல் பதிவகத்தில் (MSCR) பொதுமக்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மலேசிய குழந்தைகள் புற்றுநோய் சங்கம் (CCAM) அவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வகையில், CCAM, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (PPUM) மற்றும் Lions Club of KL Agape Sta ஆகியவை இணைந்து கோலாலம்பூரில் உள்ள The LINC KL வளாகத்தில் இரத்த தான முகாம் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

அந்நிகழ்ச்சியில் பிரதமரின் சிறப்பு அதிகாரியும், பிரதமர் அலுவலகத்தின் கூட்டரசுப் பிரதேசங்கள் மற்றும் ஊராட்சிப் பிரிவு பிரதிநிதியுமான Mohamad Mahathir Mohamed Younos, தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யூனேஸ்வரன் ராமராஜின் சிறப்பு அதிகாரி அனிதா, மலேசிய குழந்தைகள் புற்றுநோய் சங்கத்தின் (CCAM) நிறுவனர் மற்றும் தலைவர் லாவண்ய கணபதி, Lions Club of KL Agape Star தலைவர் Lion Tow Khong Wee ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உயிர்காக்கும் சிகிச்சையாக இருப்பதாக CCAM நிறுவனர் மற்றும் தலைவர் லாவண்ய கணபதி தெரிவித்தார். மலேசியாவில் பொருத்தமான ஸ்டெம் செல்களைக் கண்டறிவது கடினமாக இருப்பதால், பொதுமக்கள் MSCR பதிவகத்தில் இணைய வேண்டும் என்றும், பதிவு இலவசம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வேளையில், ஒரு பை இரத்தம் பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் என Lions Club of KL Agape Star செயலாளர் Natalie Gan கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சமூகத்தின் ஆதரவை உறுதிப்படுத்துவதே இத்தகைய நிகழ்ச்சிகளின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இவ்வாறான முன்னெடுப்புகளை வரவேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமரின் சிறப்பு அதிகாரியும், பிரதமர் அலுவலகத்தின் கூட்டரசுப் பிரதேசங்கள் மற்றும் ஊராட்சிப் பிரிவு பிரதிநிதியுமான Mohamad Mahathir Mohamed Younos, அது பலருக்கு பேருதவியாக அமையும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த இரத்த தானம் செய்தவர்கள், பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அமைப்புகளுக்கும் CCAM தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. அதேவேளை தொடர்ந்து இரத்த தானம் செய்வதற்கும் ஸ்டெம் செல் தானம் செய்பவர்களுக்கான பதிவில் இணையவும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என அச்சங்கம் கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!