
கோலாலம்பூர், செப்டம்பர்-2 – தாய்லாந்தின் சொங்க்லாவில் இரண்டு M4 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் பிடிபட்ட மலேசியர், அந்த சுடும் ஆயுதங்களை இந்நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வர முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவற்றை அந்நபர் அந்த அண்டை நாட்டிலேயே வாங்கியிருக்கக் கூடுமென, புக்கிட் அமானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதித் துறையின் இயக்குநர் Azmi Abu Kassim கூறினார்.
மேற்கொண்டு தகவல்கள் பெறப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
சொங்க்லாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நடத்தப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையில் 46 வயது அம்மலேசியர் முன்னதாகக் கைதானார்.
மலேசியப் பதிவு எண்ணைக் கொண்ட காரில் அந்த சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணைக்காக அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.