கோலாலம்பூர், நவம்பர்-28 – தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3,800 மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் அடுத்தாண்டு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளவிருப்பதாகக் கூறப்படுவதை, கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அதுவொரு பொய்ச் செய்தியென அமைச்சின் அதிகாரி உறுதிபடுத்தியதாக FMT கூறியது.
இம்மாதத் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சின் பேராளர்களை வரவேற்று உபசரித்ததற்காக, கல்வி அமைச்சு முன்னதாக கண்டனங்களைப் பெற்றது.
எனினும், அவர்களுடன் கல்வி தொடர்பான விஷயங்கள் பரிமாறப்பட்டதாக அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) அதற்கு விளக்கம் கூறியிருந்தார்.
உலகில், பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்குக் கல்வி வாய்ப்பை மறுக்கும் ஒரே நாடு இந்த ஆப்கானிஸ்தான் ஆகும்.
தலிபான்களின் அக்கொள்கை, பாலின வெறிக்குச் சமமாகும் என ஐநாவே சாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுடன் உறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த மலேசியா தயாராக இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்தாண்டு மார்ச்சில் அறிவித்திருந்தார்.
எனினும், பெண்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்ற கருத்தில் மலேசியா உறுதியாக இருப்பதாக அவர் சொன்னார்.