Latestமலேசியா

திருக்குறளை STEM கல்வியில் இணைத்த சகிலா பன்னீர்செல்வத்திற்கு World Book of Records London அமைப்பின் உலகக் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூலை 30–திருக்குறளை STEM கல்விக் கூறுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒருங்கிணைத்து ஒப்புவித்த மலேசியாவைச் சேர்ந்த சகிலா பன்னீர்செல்வம், World Book of Records London அமைப்பின் உலகச் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

‘திருக்குறளை ஒருங்கிணைந்த STEM மற்றும் UN SDG தொடர்புகளுடன் ஒப்புவித்த முதல் நபர்’ என்ற பிரிவின் கீழ் அச்சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. சகிலாவின் அதிகாரப்பூர்வ உலகச் சாதனை முயற்சி கடந்த ஜூன் 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு TMP Little Scientist Research Academy-யில் World Book of Records London அமைப்பின் Chartered Officer டாக்டர் மாலினி ஏகநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

அச்சாதனைக்காக சகிலா, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திருக்குறள்களை ஒப்புவித்ததுடன், ஒவ்வொரு குறளிலும் இடம் பெறும் கருத்துகளை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய STEM கல்விக் கூறுகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடனும் தொடர்புப்படுத்தி விளக்கினார். அதன் தயாரிப்புப் பணிகளுக்கு அவருக்கு சுமார் மூன்று மாதங்கள் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குப் பதிலாக, அதன் கருத்தை மாணவர்கள் காட்சிகள் மற்றும் செய்முறைத் திட்டங்களின் வழியாகப் புரிந்து கொள்ளும் வகையில் அவர் இந்த அணுகுமுறையை உருவாக்கியுள்ளார்.

சிறுவயதிலிருந்தே தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட சகிலாவுக்கு, அவரது தாத்தா முக்கியத் தூண்டுதலாக இருந்துள்ளார். ஆத்திச்சூடி, திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை சிறுவயதிலேயே கற்றுக் கொண்ட அந்தப் பின்னணி, அவர் திருக்குறளை நவீன கல்விக் கூறுகளுடன் தொடர்புபடுத்தும் இந்த முயற்சிக்கான அடித்தளமாக அமைந்தது.

முதற்கட்டமாக உருவாக்கப்பட்டுள்ள 50 திருக்குறள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலை வெளியிடுவதோடு, எதிர்காலத்தில் திருக்குறளின் மொத்த 1,330 குறள்களையும் இதே STEM மற்றும் UN SDG கல்வி அணுகுமுறையுடன் இணைக்கும் ஆய்வை மேற்கொள்ளும் திட்டமும் இருப்பதாக சகிலா தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!