திருமண வரவேற்பில் பரபரப்பு; காரின் இன்ஜின் பகுதியில் மாபெரும் மலைப்பாம்பு பதுங்கி இருப்பது கண்டுபிடிப்பு

கோலாலம்பூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், விருந்தினரின் காரின் இன்ஜின் பகுதியில் மாபெரும் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யூடிஎம் (UTM) ஹோட்டல் மற்றும் ரெசிடென்ஸில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கார் உரிமையாளருக்கு, ஹோட்டல் பாதுகாப்பு ஊழியரின் தகவலைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் (DJ) ஒலிபெருக்கி மூலம் அவரது வாகன பதிவு எண்ணை அறிவித்து இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
காரின் அருகே சென்றபோது, அதன் இன்ஜின் பகுதியில் பெரிய மலைப்பாம்பு சுருண்டு கிடந்தது தெரியவந்தது. பின்னர் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையினர் (APM) சம்பவ இடத்துக்கு வந்து, வாகனத்தின் முன்பகுதியைத் திறந்து பாம்பை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியுள்ள நிலையில், பலர் அதிர்ச்சியுடனும் நகைச்சுவையுடனும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், அந்தப் பகுதி நீண்ட காலமாக மலைப்பாம்புகள் காணப்படும் இடமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்



