
கோலாலம்பூர், ஜூலை.21-தமது சகோதரருடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 178.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும், அதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) முன்னாள் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki கூறியிருக்கிறார்.
மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் ‘சாலைக் கட்டணம் மற்றும் வாகன நுழைவு அனுமதி’ (RC/VEP) அமைப்பை ஏற்படுத்தி நிர்வகிப்பதற்கான ஆறு ஆண்டு கால ஒப்பந்தத்தை Integriti Padu Sdn Bhd நிறுவனம் பெற்றதாக The Edge Malaysia கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் Azamமின் சகோதரர் Datuk Nasir Baki என்றும் அது குறிப்பிட்டிருந்தது.
அது குறித்து பேசிய Azam Baki, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது எனது சகோதரருடைய வணிகம். நான் ஓய்வு பெற்றுவிட்டேன். அவரது நிறுவனத்திற்கு அத்திட்டத்தை வழங்குவது போக்குவரத்து அமைச்சின் முடிவு என விளக்கினார். உறவின் காரணமாக மட்டுமே எனது குடும்பத்தினர் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன் மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் பல பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் லட்சக்கணக்கான பங்குகள் மற்றும் வாரண்டுகளை வைத்திருந்ததாக 2021 ஆண்டின் பிற்பகுதியில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, Azamமின் பங்கு முதலீடுகள் தொடர்பான சர்ச்சை எழுந்தது. அப்பங்குகள் தனது சகோதரரால் தனது வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்தி வாங்கப்பட்டவை என்று கூறி, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறியிருந்தார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் MACC தலைவராக இருந்தபோது நிறுவனம் ஒன்றில் அவர் வைத்திருந்த பங்குகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து Bloomberg வெளியிட்ட செய்திகளைத் தொடர்ந்து Azam மீண்டும் சர்ச்சைக்குள்ளானார். அச்செய்திகள் தொடர்பாக அவர் அதன் மீது 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
Azam Baki, மே 12 அன்று MACC-இன் தலைமை ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.



