
கோலாலம்பூர், அக்டோபர் 15 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, DAP கட்சியின் இளைஞர் பிரிவான DAPSY ஏற்பாட்டில் ஊடக நண்பர்களுக்கான சிறப்பு விருந்து நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, பங்சார் சவுத்தில் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய இவ்விருந்து, ஊடகப் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கலந்துரையாடி, பரஸ்பர நல்லுறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய DAP கட்சியின் இளைஞர் பிரிவான DAPSYயின் தலைவர் வூ கா லியோங், இந்திய சமூகத்தின் நலன், கல்வி வாய்ப்புகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
மலேசியாவின் பல்லின ஒற்றுமையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அரசாங்கங்களின் செயல்பாடுகளையும் அவற்றின் மூலம் மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி ஈப்போவில் நடைபெறவுள்ள பேராக் மாநில DAP ஊடக இரவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறும் ஊடகப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, ஊடக நண்பர்களுடனான இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை டெப்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



