Latestமலேசியா

வணக்கம் மேக்ஸ் குறும்படப் போட்டி 2026: டாப் 10 தேர்வு; RM10,000 ரொக்கப் பரிசை வெல்லப்போவது யார்?

வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வணக்கம் மேக்ஸ் குறும்படப் போட்டி 2026-இன் சிறந்த 10 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வணக்கம் மலேசியாவின் OTT தளமான வணக்கம் மேக்ஸ் ஏற்பாடு செய்த இப்போட்டிக்கு, 60-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மாறுபட்ட கதைக்களங்களுடனும் படைப்பாற்றலுடனும் உருவாக்கப்பட்ட இக்குறும்படங்களிலிருந்து, நடுவர் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு டாப் 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதலில் சிறந்த எட்டு குறும்படங்களைத் தேர்வு செய்வதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நடுவர்களான இயக்குநர் சி. குமரேசன் மற்றும் இயக்குநர் கார்த்திக் ஷாமளன் ஆகியோர் கலந்தாலோசித்து, மேலும் இரு படைப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் தேர்வுப் பட்டியலைப் பத்தாக விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்தப் பத்துக் குறும்படங்களில் எட்டு படங்கள் பிரதான பரிசுகளுக்கான தேர்வில் இடம்பெற்றுள்ளன. மேலும் இரண்டு படங்கள் சிறப்புக் குறிப்பிடுதலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

போட்டியில் முதலிடம் பெறும் குறும்படத்திற்கு 10,000 ரிங்கிட்டும், இரண்டாம் இடத்திற்கு 6,000 ரிங்கிட்டும், மூன்றாம் இடத்திற்கு 3,000 ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளன. மேலும், ஐந்து குறும்படங்களுக்குத் தலா 500 ரிங்கிட் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளின் திறமையைக் கொண்டாடவும், வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கவும் பிரம்மாண்டமான பரிசளிப்பு விழா நடத்தப்படவுள்ளது. விழாவின் தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

உள்ளூர் இந்தியக் கலைஞர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதுடன், உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கான தகவல் மற்றும் பொழுதுபோக்குத் தளமாக உருவெடுப்பதே வணக்கம் மேக்ஸின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில் புதிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியாக இக்குறும்படப் போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துக் குழுக்களுக்கும் வாழ்த்துகள்! தங்களின் கதைகளையும் திறமைகளையும் நம்பி, இப்போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிய ஒவ்வொரு குழுவினருக்கும் வணக்கம் மேக்ஸ் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

பத்து படைப்புகள்… பல புதிய பார்வைகள்… பரிசுகளை வெல்லப்போவது யார்? படைப்பாளிகளைக் கொண்டாடும் வணக்கம் மேக்ஸின் பரிசளிப்பு விழாவுக்காகக் காத்திருங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!