கோலாலம்பூர், அக்டோபர் 18 – மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடுதல் பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று, ம.இ.கா உதவி தலைவர் டத்தோ டி. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை மதித்து, மலேசியர்கள் சிறப்பாக இப்பண்டிகையைக் கொண்டாடுவதற்குக் கூடுதல் விடுமுறை வழங்கும் நோக்கத்துடன் இந்த பரிந்துரை முன்மொழியப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் திகதி கூடுதல் விடுமுறை வழங்கினால், மக்கள் மேலும் ஒரு நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அமைதியாகவும் மகிழ்ச்சியுடன் நீடித்த தீபாவளியைக் கொண்டாட முடியும் என்று டத்தோ முருகையா குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் 19 பெருந்தொற்று போது மக்களுக்கு பல மாதங்கள் நீண்ட விடுமுறை கொடுக்கப்பட்ட வேளை, இப்போது தேசிய ஒற்றுமை மற்றும் கலாச்சார புரிதலை மேம்படுத்தும் விதமாக, அனைத்து மலேசியர்களுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறையை வழங்குமாறு அவர் வலியுறுத்தினார்.
பிரதமரும் மத்திய அரசும் தனது வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.