
ஜோகூர் பாரு, பிப்ரவரி-24 – இல்லாத ஓர் இணைய முதலீட்டுத் திட்டத்தை நம்பி 440,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி.
கடந்த அக்டோபரில் குறுந்தகவல் மூலம் அம்முதலீட்டுத் திட்டம் அவருக்குத் தெரிய வந்தது.
பிறகு முதலீட்டுக் குழுவொன்றில் சேர்க்கப்பட்டு, வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்ட நால்வருடன் அக்குழுவில் அறிமுகமும் ஏற்பட்டது.
பங்குகளை வாங்குவதற்கான முதலீட்டு முறை குறித்து மூதாட்டிக்கு சொல்லியும் கொடுக்கப்பட்டது.
நம்பிக்கை வந்ததால், அக்டோபர் 11-க்கும் 25-க்கும் இடைபட்ட காலத்தில் தனது வங்கிக் கணக்கிலிருந்து கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு 3 தடவையாக 440,000 ரிங்கிட்டை அவர் மாற்றியுள்ளார்.
பணத்தைப் போட்ட பிறகே, தனக்குக் கொடுக்கப்பட்ட விலைப்பட்டியல் போலியானது என அவருக்குத் தெரிய வந்தது; குழுவிலும் தொடர்புத் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்தே அவர் போலீஸில் புகார் செய்ததாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
முதலீடு என நம்பி மூதாட்டி இழந்த மொத்தப் பணமும், அவரின் சொந்த சேமிப்புடன் கணவர் மற்றும் பிள்ளைகள் கொடுத்ததாகும்.
மூதாட்டி பணத்தைப் போட்ட வங்கிக் கணக்கு, ஏற்கனவே ஒரு மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக ரவூப் சொன்னார்.