Latestமலேசியா

தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் அரங்கேறிய பிரமாண்ட ‘ராஜா சிங்க நடனப் போட்டி’

லிக்காஸ், ஜூன்-11 – தேசிய அளவிலான 2026-ஆம் ஆண்டு ஒற்றுமை வாரக் கொண்டாட்டம் இன்று தொடங்கி ஜூன் 14 வரை சபா, கோத்தா கினாபாலு, லிக்காஸ் விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் வருடாந்திர நிகழ்வான இதில் 250,000 வருகையாளர்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரக் கடைசியில் பொது மக்களுக்காக 50-க்கும் மேற்பட்ட பல்வேறு கண்கவர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பண்பாடு, பாரம்பரியம், உணவுகள், கண்காட்சி மற்றும் மலேசியர்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில், 5 முதன்மை இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

E-Sport விளையாட்டு, தேசிய நூலகக் கண்காட்சி, ரூமா காமி கண்காட்சி, FoodUnited & Food Truck உணவுத் திருவிழா, ரஹ்மா மடானி விற்பனை, பாதுகாப்பு மற்று அமுலாக்க நிறுவனங்களின் சேவைக் கண்காட்சி உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.

அவற்றில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்த, ‘ராஜா சிங்க நடனப் போட்டியின்’ இறுதிச் சுற்றுப் போட்டி, அதிரடி மேள தாள முழக்கங்களுடன் மிக விமரிசையாக அரங்கேறியுள்ளது.

விறுவிறுப்பான அசைவுகள், துடிப்பான ஆற்றல் மற்றும் பார்ப்போரைக் கட்டிப்போடும் அசாத்திய திறமைகளுடன் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி, மலேசியர்களின் பெருமைமிக்க கலாச்சார பாரம்பரியத்தையும், கலை நயத்தையும் மிகச் சிறப்பாகப் பிரதிபலித்தது.

வெறும் போட்டியாக மட்டுமில்லாமல், நாட்டின் பன்முகத்தன்மையை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதக் கலை வடிவமாக இத்தருணம் அமைந்திருந்தது.

“வேறுபட்ட கலாச்சாரம், ஒன்றுபட்ட ஆன்மா” என்ற முழக்கத்திற்கு ஏற்ப, அனைத்து இன மலேசியர்களும் இந்த சிங்க நடனக் கலையைக் கண்டு ரசித்து, தங்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.

இப்போட்டி, தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தின் மிக வெற்றிகரமான ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த 4-நாள் நிகழ்வில் குடும்பத்தோடு பங்கேற்று குதூகலிப்பதோடு, தேசிய ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்யுமாறு மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!