
கோலாலாம்பூர், ஜூலை-27-மலேசியாவில் உணவக வேலைக்கு வந்த தம்மை முதலாளி அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதாகவும், தமிழக முதல்வர் விஜய் தலையிட்டு தம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றும் இந்தியப் பிரஜை ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விஷயத்தில், ஒரு புதியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சின்ராசு எனும் அவ்வாடவர், உண்மையில் வேலை செய்த உணவகத்தின் கள்ளாப் பெட்டியில் பணத்தைத் திருடியதாக, அதன் உரிமையாளர் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாள் நடந்த திருட்டைத் தொடர்ந்து அவ்விளைஞர் கையும் களவுமாகப் பிடிபட்டு, தமிழகத்தின் கள்ளக் குறிச்சியில் உள்ள அவரின் குடும்பம் வரை விஷயம் சென்று பஞ்சாயத்து முடிந்திருக்கிறது.
நிலைமை இவ்வாரிருக்க, தம்மை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதோடு, சம்பளம் கொடுக்காமல், 1 லட்சம் ரூபாயைப் பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் சின்ராசு முன்னதாக வைரலான காணொளியில் கூறியிருந்தார்.
ஆனால் அவையனைத்துமே பொய் என உணவக உரிமையாளர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்படுகிறது.
உண்மைக்குப் புறம்பான இச்செய்தியால் உணவகத்தின் பெயர்தான் மக்கள் மத்தில் களங்கப்பட்டிருப்பதாக உரிமையாளர் கூறுவதும், தாம் திருடியதை சம்பந்தப்பட்ட ஆடவர் ஒப்புக் கொள்வதும் வீடியோவில் தெரிகிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வந்த தமக்கு இந்த இன்னல்கள் நடப்பதாகவும் முதல்வர் விஜய்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறி அவ்விளைஞர் விடுத்த கோரிக்கை வீடியோ முன்னதாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது அதில் இந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது வலைத்தளவாசிகள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுயிருக்கிறது.



