
கோலாலம்பூர், ஜூலை-5 – வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிப்பதில் தற்போதுள்ள MoU புரிந்துணர்வு ஒப்பந்தம் போதுமானதல்ல.
எனவே அதற்குப் பதிலாக கட்டாயமான இருதரப்பு வேலை ஒப்பந்தம் ஒன்றை மத்திய அரசுக்கு முன்மொழிந்துள்ளார் கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ.
தொழிலாளர்களைத் தருவிக்கும் cartel கூட்டமைப்புகளுக்கு இப்போது ‘பலவீனமான’ இந்த MoU-க்கள் மூலமாக இலாபம் கிடைக்கிறது.
அபராதமில்லை, உரிமம் பறிமுதல் செய்யப்படுவதில்லை, தொழிலாளர்களுக்கான நியாயமும் இல்லை என்றார் அவர்.
எனவே ஒரு கட்டாய ஒப்பந்தத்தை செய்வதன் மூலம் உண்மையான தண்டனைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் தொழிலாளர்களுக்கு செலவில்லாத தருவிப்பும் இருக்கும் என அவர் சுட்டிக் காட்டினர்.
வங்காளதேசமும் மலேசியாவும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.
இல்லையென்றால் அடிமைத்தன தொழில்கள் தொடரும், தொழில்துறைகள் நட்டமடையும், உலக அரங்கில் மலேசியாவும் அவமானப்படும் என்றார் அவர்.
மலேசியாவில் வேலை கிடைக்க வங்காளதேசிகள் தலைக்கு RM20,000 முதல் RM30,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளது; இதனால் கடன் சுமையுடனேயே அவர்கள் மலேசியா வருகிறார்கள் என சார்ல்ஸ் கூறினார்.
கட்டாய உழைப்பு குற்றச்சாட்டுகள் காரணமாக பெரும்பாலான மலேசிய நிறுவனங்கள் அமெரிக்க இறக்குமதி தடைகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அபராதங்களுக்கும் உள்ளாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் புதிய, வெளிப்படையான வேலை ஒப்பந்தத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையை மலேசியா மறுக்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2021-ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மாற்ற மலேசியா மறுக்கும் பட்சத்தில், தொழிலாளர் தருவிப்பை முடக்குவோம் என வங்காளதேச அரசாங்கம் எச்சரித்துள்ள நிலையில், சார்ல்ஸ் சாந்தியாகோ இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.