
கோம்பாக், செப்டம்பர்-29,
பெரிய நகரங்களுக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லை.
காரணம் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாகி விடுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.
நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு நல்ல மற்றும் ஒரு முழுமையான அளவை எட்டியப் பிறகே இது போன்ற கட்டண வசூலிப்பை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றார் அவர்.
சிலாங்கூர், கோம்பாக்கில் TBG எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போது அன்வார் அவ்வாறு கூறினார்.
நகரங்களுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு வழிமுறையாக, நெரிசல் கட்டணம் விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா, இவ்வாண்டு தொடக்கத்தில் கூறியிருந்தார்.
குறிப்பாக உச்ச நேர நெரிசலைக் குறைப்பதற்கான ‘2040 கோலாலம்பூர் போக்குவரத்து பெருந்திட்ட’ முன்வரைவில் இம்முயற்சி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
நகரத்திற்குள் நுழையும் ஓட்டுநர்கள் மீதான இந்த உத்தேச நெரிசல் கட்டணமானது, தலைநகரில் போக்குவரத்து நெரிசலை 20% வரை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சாலிஹா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.