கோலாலம்பூர், ஜன 6 – புத்ரா ஜெயாவில் இன்று நடைபெற்ற நஜீப் ரசாக் ஆதரவு பேரணி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என புத்ரா ஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முகமட் ( Aidi Sham Mohamad ) தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டின் அமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக பல்வேறு தனிப்பட்ட நபர்கள் வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
புத்ரா ஜெயாவின் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற அந்த பேரணியில் சுமார் 1,200 பேர் கலந்துகொண்டதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த பேரணியின்போது சினமூட்டும் நடவடிக்கை எதுவுமின்றி நிலைமை கட்டுப்பாட்டில் இருந்ததாக அய்டி ஷாம் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருமைப்பாட்டு பேரணியில் பங்கேற்க வேண்டாம் என நேற்று போலீசார் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருந்தனர்.