Latestஉலகம்மலேசியா

நடுவானில் காற்றுக் கொந்தளிப்பு; Singapore Airlines விமானம் குலுங்கியதில் ஒருவர் மரணம், சிலர் காயம்

சிங்கப்பூர், மே-21, லண்டனில் இருந்து பயணமான Singapore Airlines விமானம் நடுவானில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிக் குலுங்கியதில், ஒருவர் மரணமடைந்த வேளை மேலும் சிலர் காயமுற்றனர்.

இதையடுத்து சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய அந்த Boeing 777-300ER விமானம் தாய்லாந்தின் பேங்கோக் திருப்பி விடப்பட்டு, சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

SQ 321 அவ்விமானம் சம்பவத்தின் போது 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் சென்றுக் கொண்டிருந்தது.

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள் தெரிவித்துக் கொண்ட Singapore Airlines, பயணிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் பொருட்டு தாய்லாந்து அதிகாரத் தரப்புடன் ஒத்துழைத்து வருவதாகக் கூறியது.

தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்குவதற்காக குழுவொன்றை பேங்கோக் அனுப்பும் பணியிலும் அது ஈடுபட்டுள்ளது.

அவசர சிகிச்சை வழங்குவதற்காக சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அம்புலன்ஸ் வண்டியும் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் உண்மையில் நடுவானில் என்னதான் நடந்தது என்பது குறித்து தெளிவான அறிக்கை இல்லை.

இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தனது Facebook பக்கத்திலும் X தளத்திலும் பின்னர் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என Singapore Airlines கூறியது.

காற்றின் திசையில் ஏற்படும் மாறுபாடு, உயரமான மலைகள் அல்லது கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளின் மீது பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கொந்தளிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்த காற்றுக் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கமாகும்.

பெரும்பாலும் இவற்றால் பெரிய அளவில் ஆபத்துகள் ஏற்படுவதில்லை.

கொந்தளிப்பின் போது விமானம் குலுங்கும்; எப்போதாவது அரிதாக பயணிகள் காயமடைவது உண்டு.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!