
வாஷிங்டன், மே-2, அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான iPhone-கள் மற்றும் பிற சாதனங்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிபர் டோனல்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பின் முக்கிய நோக்கத்திற்கு ஏற்ப அந்நடவடிக்கை அமைவதாக அதன் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook) கூறுகிறார்.
Apple தனது உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வரிகளிலிருந்து முக்கிய மின்னணு சாதனங்களுக்கு விலக்களிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்; என்ற போதிலும், நடப்பு காலாண்டில் அமெரிக்க இறக்குமதி வரிகள் Apple-லின் செலவுகளில் சுமார் 900 மில்லியன் டாலரை அதிகரிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டனின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களுக்கு பதிலளிக்க, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் போராடி வரும் நிலையில் Apple-லின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
எனினும், இதனால் இந்தியா மற்றும் வியட்நாமுக்கு யோகம் அடித்துள்ளது கவனிக்கத்தக்கது.
வரும் மாதங்களில் அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படும் பெரும்பாலான iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
அதே சமயம் தென்கிழக்காசிய நாடான வியட்நாம், iPad மற்றும் Apple கடிகாரங்கள் போன்ற பொருட்களுக்கு இனி முக்கிய உற்பத்தி மையமாக விளங்குமென டிம் குக் கூறினார்