ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-16 – பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 257 பேர் ஜோகூர் பாரு மற்றும் கேலாங் பாத்தா வழியாக இந்நாட்டை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சியை குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது.
JB சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திலுள்ள (BSI) சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, தனிமைப்படுத்தல் வளாகம் (CIQ) மற்றும் கேலாங் பாத்தா சுல்தான் அபு பாக்கார் வளாகத்தில் கடுமையாக்கப்பட்ட பரிசோதனை, அமுலாக்க நடவடிக்கைகளால் அது சாத்தியமானது.
கைதானவர்கள் இந்தியா, இந்தோனீசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் இந்நாட்டில் தங்கியிருந்தது, போலி வேலை பெர்மிட்டை வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்கான அவர்கள் கைதாகினர்.
அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், கள்ளக்குடியேறிகளுக்கு தங்க இடம் கொடுத்தது, குடிநுழைவுத் துறை அமுலாக்க அதிகாரிகளைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்த போன்றவற்றுக்காக உள்ளூரைச் சேர்ந்த 18 பேரும் கைதுச் செய்யப்பட்டனர்.
நாட்டின் பாதுகாப்பு முக்கியமென்பதால், கள்ளக்குடியேறிகள் விஷயத்தில் அனுசரணைக் காட்டப்படாது என மாநிலக் குடிநுழைவுத் துறை கூறியது.