
நிபோங் திபால், செப்டம்பர்-10,பினாங்கு, நிபோங் திபாலில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கழிவுநீர் தொட்டிக்குள் கைக் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிபோங் திபால், Taman Seri Bistari-ரியில் உள்ள வீட்டொன்றிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் குறித்து பக்கத்து வீட்டார் அளித்த புகாரையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.
சோதனையின் போது, கழிவுநீர் தொட்டிக்குள் 50 வயதுடைய ஆடவர் கைக் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அந்த உடலானது குறைந்தது இரண்டு நாட்களாக அங்கு இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
உடலைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட ஆடவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், அவரது கணக்கிலிருந்து ஒரு மளிகைக் கடைக்கு சுமார் 30,000 ரிங்கிட் மாற்றப்பட்டு, பின்னர் அது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையை கவனித்த உறவினர் போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் குற்றவியல் சட்டத்தின் 302-ராவது பிரிவின் கீழ் இதனை கொலைச் சம்பவமாக விசாரித்து வருகின்றனர்.
சவப் பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



