கோலாலம்பூர், செப்டம்பர்-26 – அன்பளிப்புகளையும் பரிசுக்கூடைகளையும் மட்டுமே வழங்குவதற்குப் பதிலாக, சமூகத்தை மேம்படுத்த மலேசிய இந்திய பெருந்திட்டத்தை செயல்படுத்துமாறு, மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அந்த Blueprint பெருந்திட்டத்தில் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு திட்டங்கள் மற்றும் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கான ஏராளமான முன்னெடுப்புகளும் கொள்கைகளும் இருக்கின்றன.
அப்படியிருக்க, அதை நடைமுறைப்படுத்த தயக்கம் ஏன் என MIPP தலைவர் P புனிதன் கேட்டார்.
குறுகிய கால அன்பளிப்புகளோ பரிசுகளோ தேவையில்லை. இந்திய சமூகத்தை மேம்படுத்த நிரந்தர தீர்வுகளே தேவை என்றார் அவர்.
தீபாவளியை முன்னிட்டு பெருநாள் உணவுக் கூடைகளுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று, பிரதமர் தெரிவித்திருந்தது குறித்து புனிதன் பேசினார்.
இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் ஓராண்டுக்குள் தீர்க்கப்படும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அவை இன்னும் தீர்ந்தபாடில்லை; அவற்றை தீர்ப்பதற்குண்டான தெளிவான திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை என ம.இ.கா முன்னாள் உறுப்பினருமான புனிதன் கூறியிருந்தார்.
மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார சவால்களுக்கு நிரந்தர தீர்வாக, 2017-ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தலைமையிலான அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் அந்த Blueprint பெருந்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்களால் அது அமுல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு ஒரு Blueprint தயாரிக்க ஏதுவாக, ஆலோசக நிறுவனமான PEMANDU நியமிக்கப்பட்டுள்ளதாக ஒற்றுமை அரசாங்கம் கடந்த மார்ச்சில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.