
பத்து பஹாட், ஜூன்-5
பெண் ஒருவரைச் சட்டவிரோதமாக சிறைவைத்து, தாக்கி, அவரை நிர்வாணமாக்கி வீடியோ பதிவுச் செய்து மிரட்டிய வழக்கில், 3 பேருக்கு ஜோகூர் பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அவர்களில் 34 வயது Mohamad Salehuddin Ali-க்கு 3 ஆண்டுகள் சிறையும் 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.
34 வயது Nur Syuhaidah Saharan என்றப் பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறையும், 45 வயது Aliza Khamis-க்கு 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
பணம் பறித்தல், அச்சுறுத்துதல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி நிர்வாண வீடியோ எடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூன்று பேருக்கும் நேற்று நீதிமன்றம் தண்டனைகளை விவரமாக அறிவித்தது.
அவ்வகையில், பாதிக்கப்பட்ட பெண் தனியாக அடைத்து வைக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக வழக்கின் விவரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளிகள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆடையின்றி நிற்கச் செய்து, அதைத் தங்கள் கைபேசியில் வீடியோவாகப் பதிவுச் செய்து, பின்னர் அதைப் பயன்படுத்தி அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.
இந்தக் குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்குச் சிறைத்தண்டனையுடன், அபராதமும், பிரம்படியும் விதித்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தங்களது சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக உடனடியாகச் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.



