
கோலாலம்பூர், ஏப்ரல்-11, ஒரு நாட்டுக்கு சட்டத்திட்டங்களே உச்சமென்றாலும், எல்லா விவகாரங்களையும் சட்டத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாது.
அந்தச் சட்டமே அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணிகளால் வடிவமைக்கப்பட்டது தான் என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.
பஹாங் ரவூப்பில் ‘மூசாங் கிங்’ டுரியான் விவசாயிகள், இடமாற்றத்தை எதிர்கொள்ளும் 130 ஆண்டு பழமையான இந்து கோவில் ஆகிய 2 சம்பவங்களையும் அவர் அதற்கு உதாரணமாகக் காட்டினர்.
‘மூசாங் கிங்’ மரங்களை வெட்டுவதற்கும் இந்து கோவிலை இடமாற்றம் செய்வதற்கும் ஆதரவாக பேசுவோர், குறிப்பாக அம்னோ இளைஞர் தலைவரான Dr அக்மால் சாலே போன்றவர்கள், சட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு தங்கள் நிலைப்பாட்டை நிறுவுகிறார்கள்.
ஆனால், நேர்மையான மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்ட விவகாரங்களில் இது போதுமானதல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
‘மூசாங் கிங்’ டுரியான் மரங்கள் நேற்று நடப்பட்டவை அல்ல; நினைவு தெரிந்த நாள் முதல், அந்நிலங்களைச் சுத்தம் செய்து, உழைத்து மரங்களை வளர்த்தவர்கள் அந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
அந்நிலங்களை முதலில் அழித்த போது தலையிடாத அதிகாரிகள், மரங்கள் வளர்ந்து, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்த பிறகு மட்டுமே ஏன் திடீரென சட்டவிரோதம் என அறிவிக்கின்றனர்?
அதே போல், “சட்டவிரோதமான” இந்து கோவில்கள் எனக் கூறப்படும் பல கோவில்களும் பிரிட்டிஷ் காலத்தில் தோன்றியவை; தோட்ட நிலங்களில், தோட்ட உரிமையாளர்களின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டவை; அப்போது அவை சட்டவிரோதம் எனக் கருதப்படவில்லை. ஆனால் பிறகு தோட்ட நிலங்கள் விற்கப்பட்டபோது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் திடீரென சட்டவிரோதமான கட்டடங்கள் எனக் கருதப்படத் தொடங்கியது ஏன் என ராமசாமி கேள்வி எழுப்பினார்.
அந்தக் கோவில் உண்மையில் “சட்டவிரோதமானது” என்றால், DBKL ஏன் அதற்கு தண்ணீர் மற்றும் மின் இணைப்புகள் வழங்கியது? ஏன் சட்ட அங்கீகாரம் வழங்கப்படுவதில் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது? ஏன் Jakel குழுமம் நீதிமன்றத்தை நாடவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரங்களில் சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டிய அக்மால், அனுமதியில்லாமல் விற்பனை செய்த பலூன் வியாபாரியை DBKL அதிகாரிகள் தீவிரமாக கையாண்ட போது, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
அதனை மனிதாபிமானமாக நாம் எடுத்துக் கொண்டாலும், அந்த வியாபாரி சட்டத்தை மீறியதைப் பற்றிக் கேள்வி எழுப்ப அக்மால் தயங்குகிறார்.
மாறாக, DBKL-லைத் தான் அவர் சாடுகிறார்.
ஆக அவரவர் வசதிக்கேற்றாற் போலத்தான் இங்கு நீதியும் நியாயமும் கண்களுக்குத் தெரிகிறது.
இது பெரும் கொள்கை முரண்பாடாகும்.
சட்டமே அளவுகோலாக இருக்க வேண்டும் என முழக்கமிடும் அக்மால் போன்றவர்கள்,
அதை எதிலும், எவரிடத்திலும், எப்போதும் சமமாகப் பயன்படுத்த வேண்டும்—இனம், மதம், அல்லது அரசியல் ஆதரவைப் பொருத்து அல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக சட்டத்தின் வரம்புகள் என்ன என்பதை நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்க முடியும், அரசியல்வாதிகளோ அல்லது தங்களை மத நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர்களோ அல்ல.
ஆக, எந்தவொரு சட்ட வாதமும், அதன் பின்னணியான சமூக, அரசியல் மற்றும் வரலாற்று சூழல்களில் பொருத்தமானதாக இருக்க வேண்டுமென தனது facebook பதிவில் ராமசாமி கூறினார்.