
சிரம்பான், செப்டம்பர் 24 – நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகக் குழு (Exco) உறுப்பினர்கள் விஸ்மா நெகிரி அலுவலகங்களுக்குள் நுழையவும், வழக்கமான நிர்வாகப் பணிகளைத் தொடரவும் விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முதல் அமலிலுள்ள இந்தத் தடை, எந்தத் தரப்பிடமிருந்தும் எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனால் மாநில நிர்வாகப் பணிகளும் மக்களுக்கான சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள Exco உறுப்பினர்கள் சட்டப்படி இன்னும் பதவியில் இருப்பதாகவும், அவர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பு பிரிவின்படி மந்திரி பெசாரின் ஆலோசனையும் கருத்தும் தேவைப்படுவதாகவும் இஸ்மாயில் கூறினார். எனவே, Exco கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, உறுப்பினர்கள் வழக்கம்போல் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.



