ஜோகூர் பாரு, டிசம்பர்-15,ஜோகூர் பாருவைச் சேர்ந்த 69 வயது முதியவர், இணையம் வாயிலான பங்கு முதலீட்டு மோசடியில் 1.59 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.
அதிக இலாபம் பார்க்கலாம் எனக் கூறிய விளம்பரம் அக்டோபர் வாக்கில் அவரின் கண்ணில் பட்டுள்ளது.
ஆர்வத்தில் link இணைப்பைத் தட்டி மேல் விவரங்களைத் தேடியுள்ளார்.
போடும் முதலீட்டுக்கு பத்தே நிமிடங்களில் 40 விழுக்காடு வரை இலாபம் கொட்டுமென தெரிவிக்கப்பட்டதை நம்பி, எதுவும் யோசிக்காமல் முதலீட்டில் அவர் இறங்கியும் விட்டார்.
அவ்வகையில், சந்தேக நபர்கள் கொடுத்த வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நவம்பர் முதல் இம்மாதத் தொடக்கம் வரை 1.63 மில்லியன் ரிங்கிட்டை அவர் மாற்றினார்.
ஆனால் முதலீட்டுக்கான இலாபத்தை மீட்க முயன்ற போது வெறும் 44,200 ரிங்கிட்டை மட்டுமே எடுக்க அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்பிலிருந்த சந்தேக நபர் காணாமல் போய், முதலீட்டுச் செயலியையும் தன்னால் பயன்படுத்த முடியாமல் போகவே, தாம் மோசடிக்கு ஆளானதாக முதியவருக்கு சந்தேகம் வந்து போலீசில் புகார் செய்திருக்கிறார்.
அச்சம்பவம், 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படிகளை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் சொன்னார்.
இது போன்ற முதலீட்டுத் திட்ட விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாமென, பொதுமக்களை அவர் மீண்டும் கேட்டுக் கொண்டார்.